MK Stalin's history - DMK

சென்னை: “தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது. கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம்.” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மா.செக்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு.

ஒரு ஓட்டுல என்னாகிடும்னு

நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு. கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்….96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37 தான்…அதே போல 2006 ல திமுக ஆட்சி அமைச்சு 2011 ல வெறும் 31 இடங்கள்… இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம்….இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம்……கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள்.

கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை…. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடுதான். இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க. அதுமட்டுமில்ல, “இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன். இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம். நம்ம உழைப்புக்கு கிடைச்ச சான்று! ஆனா, அது வெற்றியா மாறாம போயிடுச்சு. பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

ரிசார்ட்டில் ஒளிச்சு வைக்கல மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம். இதுதான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கத்து தந்திருக்க பக்குவம். அதனாலதான், மத்த கட்சிகள் மாதிரி நம்ம MLA-க்களை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாம தோல்விலயும் நாம தைரியமாவே இருந்தோம். என்னைப் பொறுத்தவரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையா உழைச்சேன். உங்களையும் உழைக்க வெச்சேன். என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன். இதுவரை எந்த அரசும் செஞ்சு தராத சாதனைகளை நாம செஞ்சு கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியா நம்ம ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாம ஆட்சி அமைக்க முடியல. இதுக்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பல. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது. அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க. கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம். தோல்விக்கு நானே பொறுப்பு வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல பழி போடாதீங்க. எல்லாரும் என்ன சொல்றாங்க? அப்படி செஞ்சிருக்கலாம், இப்படி செஞ்சிருக்கலாம், அது நடக்கல, இது நடக்கல, அவரு கண்டுக்கல, இவரு கண்டுக்கல-னு பழி போடுறாங்க. தயவுசெஞ்சு இனிமே அதை பண்ணாதீங்க. தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்… ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது… ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது… இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க. எங்க கோளாறு நடந்துச்சு? எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம். இதை ஆய்வு செஞ்சாகணும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சனைகள் இருக்கு. எல்லாரும் இதை பரிசீலிச்சு பார்க்கணும். ஆய்வு செய்யணும். இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை.. இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோட, நம்ம செயல்பாடுகளை மாத்திகிட்டு வேலை செய்யணும்… முக்கியமா, ஒத்துமையா இருந்து வேலை செய்யணும்…. அதுக்கு முன்னாடி நாம ஒவ்வொருத்தரும் நம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சிக்கணும். முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும். அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும். அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன். அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க. கழக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன். நாளைக்கே தனி வெப்சைட் உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ‘வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும். கழகம், இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க? நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம். இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன். தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு, வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன். அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது. கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் – பொதுக்கூட்டங்கள் – ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு. இதை நான் கடந்த ஐந்தாண்டுகளில் பல முறை வலியுறுத்துனேன். குறிப்பா, காணொலிக் கூட்டங்கள் நடத்தும்போது, சோஷியல் மீடியாவோட ரீச் பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன். ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கழகத்தினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும். தி.மு.க.வைப் போல, நம்ம தலைவர்களைப்போல காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்துனவங்க வேற யாருமில்ல. பொதுக்கூட்டம், திண்ணைப் பிரசாரம், பத்திரிகை, நாடகம், சினிமா, டி.வி.-னு கால மாற்றத்திற்கேற்ப, அனைத்து தளங்களையும் கொள்கையை விளக்கும் பிரச்சாரக் களமா வெற்றிகரமா பயன்படுத்துன இயக்கம் நம்ம இயக்கம். அதை மனசுல வெச்சிட்டு, இனி வரும் காலத்துல நம்ம பிரச்சார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் மாத்திக்கணும். முன்னாடி டீக்கடையில உக்காந்து பேசிட்டிருந்த நம்ம அரசியலை, இப்ப சோஷியல் மீடியால பேசியாகணும். நேத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிச்ச ஆளும்கட்சிக்கு, மெஜாரிட்டி இல்லனாலும், நம்ம கூட்டணிக் கட்சிகளை வெச்சும் – அ.தி.மு.க.வை உடைச்சும் பெரும்பான்மையை நிரூபிச்சிட்டாங்க. அதிமுக ஆட்கள் எப்படி நடந்துக்குவாங்கனு சொல்லவே தேவையில்ல. இந்த நிலைமையில, அடுத்து என்ன நடக்கும்னு உறுதியா சொல்லவே முடியாது. நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான – திறமையான – கட்சியா நாம செயல்படணும். நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா, கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும். நாம தொடங்கிய உட்கட்டமைப்பு பணிகளை, குறித்த காலத்துல கட்டி முடிக்கிற வரைக்கும் நாம அழுத்தம் கொடுத்துட்டே இருக்கணும். சட்டமன்ற உறுப்பினர்களா இருக்க கூடியவங்களை ஆதாரங்கள், புள்ளிவிவரங்களோட ஷார்ப்பா பேச சொல்லியிருக்கேன். வெற்றியோ, தோல்வியோ – எல்லாரும் வாக்காளர்களைச் சந்திச்சு நன்றி சொல்ல சொல்லியிருந்தேன். இன்னும் அதை முழுசா செஞ்சு முடிக்காதவங்களையும் முடிக்க சொல்லுங்க. நாம மக்கள் கூடவே இருக்கணும். விரைவுல கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இனிமே, ரொம்ப கவனமா, எல்லா விஷயங்களையும் செய்யணும். எல்லா நிர்வாகிகள் கூட்டத்துலயும் நான் வலியுறுத்தி பேசுறது, நிர்வாகிகள் ஒற்றுமைதான். இப்பவாச்சும், கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைச்சு போங்க. நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா – வெற்றி என்பது சாத்தியம் இல்ல. நம்ம கட்சி வீக்கா இருக்கும் பகுதிய பாருங்க, அங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இருக்கும். நம்ம கட்சி தோற்ற தொகுதிலயும் நிர்வாகிகளின் ஒற்றுமை இல்லாம இருக்கும். அதையெல்லாம் நீங்களே நேர்ல போயி, கவனிச்சு சரிசெய்யுங்க. என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் – அடிமட்ட நிர்வாகிகள் – முழுப்பங்களிப்பைத் தரும் வகையில நாம அவங்களை தயார் செய்யணும். மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல. அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது. எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம். ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன்வந்து விலகிக்கலாம். நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்கத் தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல கழகம் கண்டிப்பா வெற்றி பெற்றாகணும். குறி வெச்சு களப்பணியாற்றுனா, நிச்சயம் வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, நீங்க உழைச்ச உழைப்பாலதான், இத்தனை தொகுதிகள்ல நாமும் நம்ம தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற முடிஞ்சுது. ஒரு தேர்தல்ல தோற்ற நாம் – மறு தேர்தல்ல வென்று காட்டி இருக்கோம். உங்க உழைப்பால வெற்றி பெற வெச்சிருக்கீங்க. அதுதான் தி.மு.க.! அந்த நம்பிக்கையோட பணியாற்றுங்க. இந்த தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேணாம். நாம பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரங்க. நம்மோட இந்த தோல்வி தற்காலிகம்தான். வெற்றியை நோக்கி பயணிப்போம். திட்டமிடுவோம். தீவிரமாக உழைப்போம். மீண்டு வருவோம்! மீண்டும் வெற்றி பெறுவோம்” எனப் பேசியுள்ளார்.