சென்னை: திமுக இன்னும் எப்படியெல்லாம் உழைக்கவேண்டும் என கருத்துகளை கேட்கிறார் ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆன்லைன் வாயிலாக கருத்துகளை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை வடிவமைக்கப்போகிறேன், கட்சியின் எல்லா மட்டத்திலும் தேவையான மாற்றங்களைச் செய்யப்போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக, 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்தார். இந்நிலையில், ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற பெயரில் திமுக தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்டு வெப்சைட் தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “எல்லாருக்கும் வணக்கம். ஒரு சின்ன கேப்புக்கு பிறகு உங்ககிட்ட வீடியோவுல பேசுறேன். கடைசியா டீலிமிடேஷன் (Delimitation) பத்தி பேசியிருந்தேன். அதைத் தொடர்ந்து தேர்தல் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு, ரிசல்ட்டும் வந்துருச்சு. ரிசல்ட்டுக்குப் பிறகு என்னவெல்லாம் நடந்துச்சு, என்ன நடக்குது.. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். ரெண்டு வாரமா எல்லா வீடுகள்லயும் நியூஸ் சேனல் தான் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த அளவுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாம போகுது. 2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கிட்டா, திமுக ஒரு பெரிய பின்னடைவைச் சந்திச்சிருக்கு. அதை நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். இது நிச்சயமாக நாம எதிர்பார்த்த ரிசல்ட் இல்ல. இதுக்கு அவர் காரணம், இவர் காரணம்னு யாரும் யார் மேலயும் பழி போடாதீங்க. தலைவரா இந்தத் தோல்விக்கு நானே பொறுப்பேத்துக்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேருது, அப்போ தோல்வி அடையும்போதும் அந்தப் பழியை நான்தான் ஏத்துக்கணும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.

சரி தோத்துட்டோம், அதுக்காக அதையே நினைச்சுக்கிட்டு முடங்கிடமாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேணும். எலக்ஷனா இருந்தாலும் கரெக்ஷனா இருந்தாலும் உங்ககிட்டதான் வந்தாகணும். மக்கள்தான் எல்லாம். இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம், திமுக இன்னும் எப்படியெல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துக்களை ஓப்பனா சொல்லுங்க. அதுக்காகத்தான் இந்த ‘உடன்பிறப்பின் குரல்’ வெப்சைட். இதுல உங்க கருத்துக்களைப் பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லேயே பேசி கருத்துக்களைச் சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும். நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம். இல்லன்னா ஒரு பேப்பர்ல எழுதி அந்தப் போட்டோவை அப்லோட் பண்ணலாம், டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துடும். அதையெல்லாம் படிச்சு, பரிசீலிச்சு நாம அடுத்தக்கட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போறேன். நம்மோட அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தியாகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் (Evolve) ஆகித்தான் ஆகணும். உங்களோட கருத்துக்களின் அடிப்படையில ‘DMK 2.0’ வரும். கட்சியோட எல்லா மட்டத்துலயும் தேவையான மாற்றங்களைச் செய்யப்போறேன். இதனால அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும், உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே… நீங்க சொல்லுங்க!.. நான் கேட்கிறேன்” எனப் பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.